வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...!

Tripoto
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! by Sivalingam P

#Mahabalipuram

#Mamallapuram cycle ride

தொலைதூரப் பயணம் !

சைக்கிள் பயணம் என்றாலே ஆனந்தமான ஒன்றுதான்.

சிறுவயதில் சைக்கிள் வாங்குவது, அலங்கரிப்பது, தினமும் துடைத்து, தெருவில் ஓட்டுவது, பள்ளிக்கு எடுத்துச்செல்வது என்பது தான் பெரிய இலக்காக இருந்திருக்கும் அனைவருக்கும் !

பளிச்சென்ற முன்விளக்கு ,

அதன் தலையில் போர்த்திய மஞ்சள் துணி,

பூமியைத் தாங்கிய தங்கநிற அட்லஸின் படம்,

உள்ளங்கை அளவில் மணி,

அதனருகே அடிக்கும் வண்ணங்களில் பீப்பி,

பச்சை வண்ண கைப்பிடி உறை,

அதில் முள் போன்ற சிறுசிறு கீற்றுகள்,

அதன் முடிவில் கேசட் பிலிம்கள் கற்றைகளாக ,

பிரேக் கம்பிக்கு ஒரு சொரசொரப்பான பச்சையுறை,

முக்கோணத்தில், மேல் கம்பியில் ஒரு கவர்,

குழந்தைகள் அமரும் கூடை அல்லது குட்டி சீட்,

பெடல் கட்டைகளுக்கு ஒரு கவர்,

விசாலமான மற்றும் உறுதியான பின்னிருக்கை,

சீட்டுக்கு மெத்தை கவர்,

அதன் பின் திரைபோன்ற அமைப்பு,

சீட் ஸ்பிரிங் குழியில் துடைக்கும் துணி,

அதிசயிக்க வைக்கும் டைனமோ ,

அதனருகே சிவப்பு வண்ண பின்விளக்கு,

சக்கரங்களில் உருண்டோடும் பிளாஸ்டிக் குண்டுகள்,

சக்கர அச்சில் வண்ணமயமான முட்பூக்கள் ,

செயின் தெரியாத ஸ்டீல் கவர்,

அதன் மேல் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கரில் சைக்கிள் ஓனரின் பெயர்,

அகலமான ஸ்டாண்ட்,

நான்கு பேர் சென்றாலும் குலையாத கட்டமைப்பு....

என நீண்டு கொண்டே செல்லும் பழைய சைக்கிளின் அலங்காரங்கள் ..!

இத்தனை அலங்காரங்களோடு இருக்கும் சைக்கிள், ஒரு காருக்குச் சமமாக மதிக்கப்பட்டது. அதில் தான் அத்தனை சந்தோசங்கள் இருந்தன.

இன்று அது முழுவதும், சென்ற இடம் தெரியாமல், வீட்டுக்கு இரெண்டு பைக் என்ற நிலை வந்துவிட்டது.

இப்பொது இருக்கும் சைக்கிள் எடைகுறைவாக மற்றும் வேகமாகச் செல்லக்கூடிய கட்டமைப்பு; ஆனால் அதன் தரம் ஒருவர் செல்லக்கூடிய அளவுக்கே !

சரி கதைக்கு வருவோம் !

இக்கட்டுரை (நெடுந்தூரப் பயணம்) பெரிய தூரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், 107 கிலோமீட்டர் பயணத்தை சைக்கிளில், ஒரு சுற்றுலாவாக எவ்வாறு சென்று மகிழ்ந்தோம் என்பதே !

ஊரடங்கு காலத்தில் எங்கும் அதிக தூரம் சொல்ல முடியாமல், 5 மற்றும் 10 கிலோமீட்டரில் தினமும் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த வேளையில், "கடற்கரை வரை சென்று வருவோமே" என்ற எண்ணம் தோன்றியது.

அனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கில், எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில், மூன்று வாரங்கள் செல்ல, என்னதான் வெளியில் நடக்கிறது ? தெரிந்து கொள்ள சைக்கிள் பயணம் ஒன்றைத் திட்டமிட்டோம்.

முடிச்சூரிலிருந்து வண்டலூர் வழியாக கோவளம் சென்று, சோழிங்கநல்லூர், தாம்பரம் வழியாகத் திரும்பி வரும் திட்டத்தோடு, ஒரு அழகான முழு ஊரடங்கில், அதிகாலை 5மணிக்குக் கிளப்பினோம் நானும், நண்பர் சங்கரும்.

சென்னை வெளிவட்டச் சாலையில், சோடியம் விளக்குகள் மஞ்சள் வண்ணத்தில் அலங்கரித்துக்கொண்டிருக்க, அலங்கரித்தது போதும், கிளம்பு, கிளம்பு என்ற பாணியில், கிழக்கு வானம் நீல நிறத்தில் காலைக் கதிரவனை துயில் எழுப்பத் தயாரானது !

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 1/17 by Sivalingam P

கடற்கரை சென்று பல மாதங்கள் ஆனதால் , ஆவலோடு பயணம் தொடர்ந்தது.

வண்டலூரைக் கடந்து கண்டிகை, மாம்பாக்கம் செல்லும்போது கறிக்கடைகளில் கூட்டம் அமோகமாக இருந்தது.

கோவளத்தை அடையும் போது மணி 6.30 ஆனது . அவ்வாறே இடதுபுறம் திரும்பி சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும். வலதுபுறம் சற்று தூரம் சென்று கடற்கரைக்குச் சென்று வருவோம் என, பாண்டிச்சேரி நோக்கிச் சென்றோம்.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 2/17 by Sivalingam P

கிழக்கு கடற்கரை சாலை, காலை வேளையில் ஆள் ஆரவாரமின்றிக் காணப்பட்டது. சிறுது தூரம் சென்றவுடன், நண்பர் 'மாமல்லபுரம் சென்று வருவோமா' ? எனக் கூற, சற்றும் யோசிக்காமல் சரியென்றேன்.

எவ்வளவு கிலோமீட்டர் என பார்த்துவிட்டு, நேராக மாமல்லபுரம் சென்றது எங்களது சைக்கிள்.

எப்போதும் அதிவேகமாய் பறக்கும் வாகனங்களை, இந்த சாலையில் இப்பொழுது காண முடியவில்லை, வெகு நேரமாகியும். அதிகாலை வெயில் கூட இல்லாமல், மேகக்கூட்டங்கள் மறைத்துக்கொண்டது, எங்களுக்குச் சாதகமாக இருந்தது. பின்னர் ஓரிடத்தில் சாலையோரம் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சென்றோம்.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 3/17 by Sivalingam P

அப்போது விர்ரென சென்றது ஒரு பென்ஸ் கார் , அப்படியொரு வேகம் ! அது பென்ஸ் கார் என்பது கூடத் தோரயமாகத்தான் தெரிந்து கொண்டோம்.

பிறகு கவனமாக சாலையோரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தோம்.

சரியாய் 7.30 மணிக்கு மாமல்லபுரம் அடைந்து, கடற்கரை கோவிலைப் பார்க்க, மணலில் சைக்கிளை உருட்டிச்சென்றோம். இவ்வளவு தூரம் வந்தது கூடக் களைப்பில்லை. மணலில் உருட்டிச்செல்வது அவ்வளவு கடினமாய் இருந்தது.

கடற்கரை கோவில், கலங்கரை விளக்கு, பஞ்ச ரதம், அர்ச்சுணன் தபசு என அனைத்தையும் பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 4/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 5/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 6/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 7/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 8/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 9/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 10/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 11/17 by Sivalingam P
Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 12/17 by Sivalingam P

என்ன , மற்ற நாட்களில் அதனருகே சென்று பார்ப்போம் கூட்டத்தோடு கூட்டமாக!

இப்பொது அனைத்தையும் தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. கலங்கரை விளக்கு நண்பர் சங்கருக்கு மிகப்பிடித்துப்போக, மரத்தினிடையே இருந்த இடைவெளியில் சாலையிலிருந்தபடியே எடுத்த புகைப்படம் இப்பயணத்தின் சிறப்பானதாக உணர்தோம்.

ஆம் சாதாரண நாட்களில் கண்டிப்பாக கலங்கரை விளக்கு அடியில் அல்லது அதன் உச்சிக்கு சென்று பார்ப்போம். ஊரடங்கு, சுற்றுலா தளத்தை வேறு விதமாக பார்க்கச்செய்தது.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 13/17 by Sivalingam P

நீல வானம், பசுமைப்புல்வெளி, சிற்பங்களின் அழகு இவையனைத்தும் ரசிக்க ஆளின்றி காணப்பட்டது.

மேலும் இதுபோல் யாருமின்றி இவ்விடங்களை புகைப்படம் எடுக்க நல்லதொரு வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது.

நேரம் செல்லச் செல்ல காலைப்பசி வாட்டியது. கொண்டு சென்ற ரொட்டி மற்றும் பழங்களை உண்டு விட்டு, கடைகளில் தேவையானதை வாங்கிக்கொண்டோம்.

பெரும்பாலும் அனைத்து உணவகம், மளிகைக் கடைகள் திறந்திருந்தன.

அவ்வாறே மெதுவாய் வந்து, பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் நோக்கி சென்று கூடுவாஞ்சேரி வழியாக முடிச்சூர் வருவதாய்த் திட்டமிட்டு மெதுவாய் நகர்ந்தோம்.

வெயில் காலை 9 மணிக்கு மேல் வாட்டியெடுத்தது. ஏறக்குறைய 50கிலோமீட்டர் பயணம் ஏற்கனவே முடிந்ததால், மிகுந்த சேர்வாகியது எனக்கு!

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 14/17 by Sivalingam P

அதுமட்டுமில்லாமல் நேரான சாலை. ரசிப்பதற்கு ஏதுமின்றி வெறுமனே சென்று கொண்டிருந்தோம். திருப்போரூர் எப்போ வரும் வரும் என்று நகர்ந்தாலும் வந்தபாடில்லை !

இப்படியே 45 நிமிடம் செல்ல, ஓரிடத்தில் நின்று ரொட்டி தண்ணீர் என இளைப்பாறிவிட்டுக் கிளம்பினோம். திருப்போரூர் வந்ததும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் சென்றோம். நல்ல அகலமான சாலை, இருபுறமும் பசுமையைச் சுமந்த மரங்கள் ! எப்போதாவது இரு சக்கர வாகனங்கள் சென்றது.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 15/17 by Sivalingam P

இந்த நிலையில், எதிர்காற்று வீசத் தொடங்கியது. சோதனை தான் என்று தெரிந்துகொண்டு எழுந்து வேகமாய்ச் செலுத்தினேன்.

கியர் சைக்கிள் நல்ல இருக்கை, அதற்கான உடை என்று சென்றால், 200 கிலோமீட்டர் கூட தாராளமாக செல்லலாம்.

11 மணியளவில் பூண்டி வந்ததும், வலதுபுறம் திருப்பி கூடுவாஞ்சேரி நோக்கி சென்றோம். அருமையான மற்றும் அகலமான புதிய சாலை ! இப்படியே ஒரு மணிநேரம் செல்ல, வழியில் மரத்தடியில் அமர்தோம்.

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 16/17 by Sivalingam P

அப்படியே தூங்க சொல்லியது உடல் களைப்பு. சரியான வெயில் வேறு! 15நிமிடத்திற்கு பிறகு எழுந்து நகர்த்தக்கூட முடியவில்லை. வேறு வழியில்லை நகரவேண்டும் என்பது கட்டாயம் !

அப்போதுதான் "கடினமான இலக்குகள், அதனை நோக்கி நகரும் போது இலகுவாகின்றன" என்ற வார்த்தைக் கோர்வை மனதில் தோன்றியது. அவ்வாறு நினைத்துக் கொண்டே பெடலை மிதித்த, ஓவ்வொரு மிதியும் என்னை இலக்கை நோக்கி அடையச் செய்தது.

"எதுக்குடா இந்த வேலை" என்று கேட்கத் தோன்றுகிறதா ? எனக்கும் அப்டித்தான் இருந்தது !

இருந்தாலும், மனவலிமை மற்றும் மெய்வலிமைக்கான ஒரு சோதனையே இந்தப் பயணம் !

அதை முடித்துவிட்டதால்தான் என்னால் இக்கதையைக் கூட எழுத முடிகிறது.

கூடுவாஞ்சேரி அருகாமையில் ஒரு கடையில் சோடா குடித்துவிட்டு, அருகிலிருக்கும் அண்ணன் பழனியை (அலுவலக நண்பர்) பார்த்துவிட்டுச் செல்லலாம் என அழைத்தபோது, வாருங்கள் என்றார்.கூடவே தண்ணீரும் கொண்டு வரச் சொல்லியிருந்தேன்.

பின்னர் அவரிடம் சிறுது நேரம் பேசிவிட்டு, கொண்டு வந்த தண்ணீரை வாங்கிக்கொண்டு, ஜிஎஸ்டி சாலையை அடைந்த பிறகுதான், "வந்துவிட்டோம் அருகில்" என நிம்மதி வந்தது.

வண்டலூர் அருகே ஒரு கார் ஒன்று சாலையோர உணவின்றி தவிக்கும் மக்களை கண்டறிந்து சாப்பாட்டுப் பொட்டலங்களை கொடுத்துக்கொண்டிருந்தனர். "பெரிய மனதுதான் இவருக்கு" என்று பாராட்டிவிட்டு வந்துகொண்டிருந்தோம். என்னதான் முழு ஊரடங்கு என்றாலும் ஆங்காங்கே குடிமகன்கள் சாலையோரத்தில் சரியான விகிதத்தை சரியாகச் செய்து கொண்டிருந்தனர். வண்டலூர் மேம்பாலத்தை கடந்து மண்ணிவாக்கத்தில் ஒரு இளநீர் சாப்பிட்டு வீட்டை அடைய மணி பிற்பகல் 2 !

ஏறக்குறைய 9 மணி நேரம்; 107 கிலோமீட்டர் பயணம். 5 மணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டும். இருந்தாலும் சைக்கிளில் மாமல்லபுரம் சுற்றுலா சென்று வந்த அனுபவம் அருமையாயிருந்தது !

நீங்களும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளுங்கள் எனக்கூற விரும்பவில்லை. மேற்கொண்டாலும் தப்பிலேயே என்றுதான் கூறுவேன். ஆனால் ஆரோக்கியமான செயலை தேர்ந்தெடுத்து மனவலிமை மற்றும் மெய்வலிமையை சோதித்துத்தான் பாருங்களேன் !

என்னுடைய சைக்கிள் புகைப்படம் மற்றும் பயணங்களைப் பார்த்து, தம்பி ஆதியும் (அலுவலக நண்பர்) புதிய சைக்கிள் வாங்கி தினமும் ஓட்டிக்கொண்டிருப்பது மகிழ்வான செய்தி !

Photo of வாருங்கள் மாமல்லபுரத்திற்கு சைக்கிளில் சென்று வருவோம்...! 17/17 by Sivalingam P

"நம்மளுடைய செயல்களும் இவ்வாறான மாற்றத்தை உண்டாக்குகிறது" என்பது நிறைவான ஒன்று எனக்கு !

என்றும் அன்புடன்,

ப சிவலிங்கம்

For more interesting nature, adventure & wildlife travel story, refer the below link.

https://sivalingamps.wixsite.com/mysite/blog